வாஷிங்டன்: அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுப் படைத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் டியகோ கார்சியாவில் இரண்டு நாடுகளின் கூட்டுப் படைத் தளம் உள்ளது.
மார்ச் 20ஆம் தேதி ஈரான் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்திரீட் ஜர்னல் இத்தகவலை வெளியிட்டது.
ஈரானின் பகுதியிலிருந்து 4,000 கிலோ மீட்டர் தூரம் பாயக்கூடிய அந்த ஏவுகணை இலக்கைத் தாக்கவில்லை. ஆனால் முன்பு கருதப்பட்டதைவிட டெஹ்ரானுக்கு நீண்டதூரம் பாயக்கூடிய ஏவுகணைகள் இருப்பதை இது காட்டுகிறது.
இத்தாக்குதலுக்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஏவுகணைகளில் ஒன்று, பறக்கும்போதே செயலிழந்தது. மற்றொரு ஏவுகணையை அமெரிக்க போர்க் கப்பலிலிருந்து ஏவப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையால் இலக்கு வைக்கப்பட்டது என்று ஜர்னல் குறிப்பிட்டது.
சாகோஸ் தீவில் உள்ள டியகோ கார்சியா, தற்காப்புக்காக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள பிரிட்டன் அனுமதித்த தளங்களில் ஒன்று.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் உட்பட ஆசிய நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய மையமான அந்தத் தளத்தில், அமெரிக்கப் படைகள் குண்டுவீச்சு விமானங்களையும் பிற உபகரணங்களையும் வைத்துள்ளன.
1960களில் இருந்து சாகோஸ் தீவுகளைத் தன்வசம் வைத்திருந்த பிரிட்டன், அவற்றை மொரிஷியசிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது. அத்தீவுகளில் மிகப்பெரிய டியாகோ கார்சியாவில் உள்ள தளத்திற்கான குத்தகையை அது கொண்டுள்ளது.

