ஈரான் ஆட்சியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு: அதிர்ந்த ஜெர்மனி, திரண்ட 250,000 பேர்

ஈரான் ஆட்சியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு: அதிர்ந்த ஜெர்மனி, திரண்ட 250,000 பேர்

2 mins read
a35829f2-7d93-4a83-9762-99fed59d3009
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சி மாற்றம் வேண்டி, ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஏறத்தாழ 250,000 பேர் ஒன்றுகூடி பேரணி நடத்தினர். - படம்: ஏபி

ஜெர்மனி: ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஏறத்தாழ 250,000 பேர் ஒன்றுகூடி பேரணி நடத்தினர்.

மியூனிக்கில் நடைபெற்று வரும் உலகளாவிய பாதுகாப்பு மாநாட்டிற்காக அனைத்துலகத் தலைவர்கள் பலர் ஜெர்மனிக்கு வருகையளித்துள்ள நிலையில், மாநாடு நடைபெறும் பகுதிக்கு வெளியே, இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

‘‘கடந்த ஆண்டிறுதியிலிருந்து மக்கள் வாழ்க்கையை ஒடுக்கும் இந்த அடக்குமுறை ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். ஜனநாயகம் வேண்டும்; நாட்டில் மக்கள் வாழ்வு மாற ஆட்சி மாற்றம் வேண்டும்,’’ என்று வலியுறுத்தப்பட்டன.

ஒரு புறம் வாத்தியங்கள் ஒலிக்க மறுபுறம், அவ்வட்டாரமே அதிரும் வகையில் பேரணியில் நீண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையே, ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் இளவரசர் ரேஸா பஹ்லவி, ஈரான் அரசியலில் மீண்டும் நுழைய முயன்று வருகிறார். அவர் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுகூடியவர்களுக்கு தமது ஆதரவை அளிப்பதாகக் கூறினார்.

‘‘ஈரான் மக்களுக்கு உதவ அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வர வேண்டும்,’’ என்றும் கோரிக்கை விடுத்தார் அவர்.

முன்னதாக, ஈரான் தலைமைத்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இப்பேரணியில் திரண்ட பல்லாயிரக்கணக்கானோர் சிங்கம், சூரிய உருவம் பொறிக்கப்பட்டிருந்த பச்சை-வெள்ளை-சிவப்பு வண்ணத்திலான கொடிகளைக் கைகளில் ஏந்தி ‘மாற்றம் வேண்டும்! ஷா வாழ்க’ என்று குரலெழுப்பியது குறிப்பிடத்தக்கது.

1979ஆம் ஆண்டு பஹ்லவி வம்சத்தை வீழ்த்திய இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு ஈரான் அந்தக் கொடியைப் பயன்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது.

கடந்த டிசம்பர் மாத இறுதியிலிருந்து நாடு தழுவிய போராட்டங்கள் ஈரான் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் தொடங்கியிருப்பது, ஈரான் ஆட்சியாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

1979 புரட்சியில் தனது தந்தை தூக்கியெறியப்பட்டதிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் மன்னர் வம்சமான பஹ்லவி, ஈரானில் “மேலும் அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மற்ற நாடுகளின் மனிதாபிமான தலையீடு வேண்டும்,’’என்று வலியுறுத்தினார்.

மியூனிக்கில் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் அணிந்திருந்த ‘எம்ஏஜிஏ’ (அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்யுங்கள்) தொப்பிகளைப் போலவே, “ஈரானை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” என்ற சிவப்புத் தொப்பிகளை அணிந்திருந்தனர். பலர் பஹ்லவி உருவம் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 

இது அனைத்துலக அரசியலில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்