ஈரான் ஆர்ப்பாட்டங்கள்3,000க்கும் மேல் உயிரிழப்பு

2 mins read
45f60f92-52b6-45d6-8db4-f0985b488c82
தலைநகர் டெஹ்ரானின் சடகெய் சதுக்கத்தில் பேருந்து ஒன்று ஆர்ப்பாட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ளது. - படம்: ஏஎஃப்பி

துபாய்: ஈரானில் தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்டு நாட்கள் நீடித்த இணையச் சேவைத் தடைக்குப் பிறகு, இணையச் செயல்பாடுகள் மிகச் சிறிய அளவிலேயே மீண்டும் தொடங்கியுள்ளன.

2,885 ஆர்ப்பாட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 3,090 பேரின் மரணத்தை உறுதி செய்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த எச்ஆர்ஏஎன்ஏ (HRANA) குழு தெரிவித்தது.

ஈரானிய அரசின் மிகக் கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளால், போராட்டங்களின் தீவிரம் பொதுவாகக் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களாகத் டெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் ஓரளவு ஓய்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள உள்ளூர்வாசிகள் சிலர் கூறுகின்றனர்.

நகரின் வான்வெளியில் ஆளில்லா வானூர்திகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோதும், ஆர்ப்பாட்டத்திற்கான பெரிய அறிகுறிகள் வியாழக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தென்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ஈரானில் பொருளியல் நெருக்கடி அதிகரித்துள்ளதையடுத்து, அந்நாட்டின் சமயப் போதகராட்சி முடிவுக்கு வர வேண்டும் எனக் கோரி டிசம்பர் 28ல் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.

கடந்த வார இறுதியில் இவை பெரும் வன்முறையில் முடிந்தன. 1979ல் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இதுவே மிகப்பெரிய உள்நாட்டு வன்முறை நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களை ஈரானிய அரசு தூக்கிலிட்டால் அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்தத் தூக்குத் தண்டனைகளை ஈரானியத் தலைவர்கள் ரத்து செய்திருப்பதாகக் கூறினார்.

இருப்பினும், இத்தகைய மரண தண்டனைத் திட்டங்களை நிறைவேற்றப்போவதாகவோ அல்லது ரத்து செய்திருப்பதாகவோ ஈரான் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்