டெஹ்ரான்: சீனாவில் தயாரிக்கப்பட்ட, தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணைக் கட்டமைப்புகளைப் பெற ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக அத்தகைய 400 கட்டமைப்புகள் ஒருசில வாரங்களில் ஈரான் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 60 முதல் 70 மில்லியன் அமெரிக்க டாலர் (77.5 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான இந்தக் கொள்முதல், அமெரிக்காவுடனான போர் தொடங்கிய பிறகு ஈரான் அதன் குறுகிய தொலைவு ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்பை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளும் ஆகப் பெரிய கொள்முதலாகக் கருதப்படுகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ‘கியூடபிள்யூ-19’ ஏவுகணை அமைப்புகளையும் ‘எஃப்என்16’ வகை ஏவுகணைகளையும் வாங்குவது குறித்து ஈரானிய அதிகாரிகள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதையடுத்து ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட ஓர் அனைத்துலக முதலீட்டு நிறுவனத்துடன் ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை விரைவாக வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும். சிறிய குழுக்கள் மூலம் இயக்க முடிவதோடு, அடிக்கடி இடத்தை மாற்றவும் முடியும் என்பதால் நிலையான ஆகாயப் பாதுகாப்பு அமைப்புகளைவிட இவை தாக்குதலுக்கு உள்ளாவது குறைவு என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆளில்லா வானூர்திகள், தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், ஏவுகணைகள் போன்றவற்றைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை அமைப்புகள், ஈரானின் ஆகாயப் பாதுகாப்பு ஆற்றலைக் கணிசமாக அதிகரிக்கும்.
இருப்பினும், இந்த ஆயுத ஒப்பந்தம் குறித்துச் சீனாவோ ஈரானிய அரசாங்கமோ இதுவரை எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த ஏவுகணைக் கட்டமைப்புகளின் விநியோகம் சாலை வழியாக இடம்பெறுமா வான்வழியாக இடம்பெறுமா என்பது குறித்தும் தகவல் இல்லை.

