ஈரான் போரால் சோமாலியக் குழந்தைகளுக்குப் பேரிடி

ஈரான் போரால் சோமாலியக் குழந்தைகளுக்குப் பேரிடி

2 mins read
adfcf345-7d90-4aab-a437-819e4c0e6742
உள்நாட்டில் இடம்பெயர்ந்த சோமாலியப் பெண் ஒருவர், டைனிலே மருத்துவமனையில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள தனது குழந்தைக்கு உணவூட்டுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

நைரோபி/ஜெனீவா: வரவிருக்கும் பஞ்சம், வெளிநாட்டு உதவிகளில் ஏற்பட்ட கடுமையான தடைகள் என இரட்டைப் பேரழிவுகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவின் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்துள்ள போர் என்பது விண்ணை முட்டும் பெட்ரோல் விலைகளைவிட மேலானது.

அது வாழ்வா சாவா என்ற பிரச்சினையாக வெடித்துள்ளது.

சரக்குப் போக்குவரத்துத் தடங்கல்களால் உணவுப்பொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது. அது, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை மருத்துவ நிலையங்கள் திருப்பி அனுப்பவும், விநியோகங்களைப் பங்கீடு செய்யவும் கட்டாயப்படுத்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 500,000 குழந்தைகள், உயிருக்கு மிகவும் ஆபத்தான வடிவமான ‘கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாத, பிரத்தியேகப் பால், ஊட்டச்சத்து நிறைந்த வேர்க்கடலைப் பசை ஆகியவற்றின் சொற்ப இருப்பைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக பைடோவா மற்றும் மொகடிஷுவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

“தேவைகள் அதிகமாக இருப்பதாலும், எங்களிடம் அதிக அளவில் பொருள்கள் இல்லாததாலும், குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் அளவைக் குறைத்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது,” என்று ஹசன் யஹ்யே கெய்ரே எனும் தாதி கூறினார்.

1,200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அவரது மருத்துவமனையில் மீதமுள்ள 225 அட்டைப் பெட்டி வேர்க்கடலைப் பசை இரண்டு வாரங்களுக்குள் தீர்ந்துவிடும் என்று அந்த மருத்துவமனைக்குப் பொருள்களை வழங்கும் அனைத்துலக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

ஈரானில் நடக்கும் போர் தொடர்பான போக்குவரத்துத் தாமதங்களும் அதிகரித்து வரும் செலவுகளும், ஏற்கெனவே சிக்கலான சூழ்நிலையை மேலும் மோசமாக்குகின்றன என்று கூறியுள்ள மூன்று உதவிக் குழுக்களில் அனைத்துலக மீட்புக் குழுவும் ஒன்று.

இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதிமுதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதலைத் தொடங்கியதாலும், ஈரான் வளைகுடாப் பகுதிக்கான நுழைவாயிலை மூடியதாலும், கப்பல்கள் பற்றாக்குறையால் அந்தச் செயல்முறை 55-65 நாள்களாகத் தள்ளிப் போயுள்ளது என்று மொகடிஷுவில் உள்ள ‘பசிக்கு எதிரான நடவடிக்கை’ அமைப்பின் சுகாதார, ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் முகம்மது உமர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்