ஈரான் போர் எதிரொலி: ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மூடல்

ஈரான் போர் எதிரொலி: ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மூடல்

1 mins read
09c12766-533a-47dd-9309-a5e306a50fc4
நொடித்துப்போன ஸ்பிரிட் நிறுவனத்தால் எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க முடியவில்லை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மே 2ஆம் தேதியுடன் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.

ஏற்கெனவே அந்நிறுவனம் நொடித்துப் போயிருந்தது.

அமெரிக்க அரசாங்கத்தின் மீட்புத் திட்டத்தை கடன் வழங்குவோர் ஆதரிக்காததால் ஸ்பிரிட் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது, ஈரான் போரால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட முதல் விமான நிறுவனமாகும்.

இரண்டு மாதங்களாக நீடித்த ஈரான் போரால் விமான எரிபொருள் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனைச் சமாளிக்க முடியாமல் ஸ்பிரிட் தடுமாறியது.

இந்த நிலையில், ஸ்பிரிட் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய வேலைகளை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது நெருங்கிய ஆலோசகர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஸ்பிரிட் நிறுவனத்தை மீட்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அவரது 500 மில்லியன் டாலர் மீட்புத் திட்டத்தை கடன் வழங்குவோர் ஆதரிக்கவில்லை.

ஒரு காலத்தில் அமெரிக்கப் பயணங்களில் ஐந்து விழுக்காட்டை கொண்டிருந்த ஸ்பிரிட் நிறுவனத்திற்கு இணையான எந்தவொரு நிறுவனமும் இருபது ஆண்டுகளில் நொடித்துப் போகவில்லை. முக்கிய விமான நிறுவனங்கள் போட்டியிட்ட சந்தையில் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க ஸ்பிரிட் உதவியது.

நிறுவனத்தை மீட்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் எட்ட முடியாமல் ஸ்பிரிட் நிர்வாக சபைக் கூட்டம் முடிவடைந்தது என்று அது பற்றி நன்கறிந்த ஒருவர் மே 1ஆம் தேதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விமான நிறுவனம்நொடித்துப் போதல்அமெரிக்காடோனல்ட் டிரம்ப்