ஈரான் போர் எதிரொலி: ரஷ்ய கச்சா எண்ணெய்யை நாடும் ஆசிய நாடுகள்

ஈரான் போர் எதிரொலி: ரஷ்ய கச்சா எண்ணெய்யை நாடும் ஆசிய நாடுகள்

2 mins read
06b60ce2-c48c-4b32-b1f6-519553a453ea
பிலிப்பீன்சில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ‘எரிபொருள் தற்காலிகமாக இருப்பு இல்லை’ என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: அமெரிக்கா ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் ஒரு மாதத்தைத் தாண்டிவிட்டது.

இதனால், உலகளவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனைச் சமாளிக்க ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை ஆசிய நாடுகள் நாடி வருகின்றன.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைப் பெறுவதில் அந்த நாடுகளுக்கு இடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போரினால் உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய், எரிவாயு போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து ஆசியாவிற்கு வரவேண்டிய எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரயிறுதியில், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களும் இந்தப் போரில் இணைந்தது, கப்பல் போக்குவரத்திற்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

முதலில் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை, தற்போது உலகின் பிற நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருவதால், ரஷ்யா பில்லியன் கணக்கான வெள்ளியை ஈட்டி வருகிறது.

இருப்பினும், ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை எந்த அளவிற்கு அதிகரிக்க முடியும் என்பதில் வரம்புகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும், ரஷ்யா ஏற்கெனவே அதன் அதிகபட்ச ஏற்றுமதி அளவை எட்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரேன்மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களாலும் ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள்மீது உக்ரேன் நடத்திவரும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களாலும் அதன் ஏற்றுமதித் திறன் பாதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்