பேங்காக்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானைத் தாக்கி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்குகிறது. மேலும் ஹோர்முஸ் நீரிணையும் மூடப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரால் உலக நாடுகள் பல போதிய எரிபொருள் இல்லாமல் தடுமாறுகின்றன. விமானப் பயணச் சீட்டுகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் போர் காரணமாக தாய்லாந்தின் சொங்ரான் நிகழ்ச்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஏப்ரல் 13, 14, 15 தேதிகளில் சொங்ரான் நிகழ்ச்சி நடக்கிறது.
உலகப் புகழ் பெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இம்முறை மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக ஈரான் போர் உள்ளது.
விமானப் பயணச்சீட்டுகளின் விலை, போர் மற்றப் பகுதிகளுக்குப் பரவும் அபாயம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதனால் பலர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர் அல்லது ஒத்திவைத்துள்ளனர்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகக் குறையும் என்று கூறப்படுகிறது. அண்மையில் அங்கிருந்து தாய்லாந்து செல்லும் விமானங்களின் பயணச்சீட்டு விலை இருமடங்கு உயர்ந்தது.
2025ஆம் ஆண்டு நடந்த சொங்ரான் நிகழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஹோட்டல், சில்லறை வியாபாரம், நிகழ்ச்சி ஏற்பாடு போன்றவை போதுமான அளவு வர்த்தகத்தைப் பெறவில்லை.
அதேபோல் உள்நாட்டிலிருந்து சொங்ரான் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஒரு நகரத்திலிருந்து மற்றோர் நகருக்குச் செல்வதை தாய்லாந்து மக்கள் குறைத்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வாகனங்களுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்காவிட்டால் பிரச்சினையாகும் என்பதால் அவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதனால் 2027ஆம் ஆண்டு சொங்ரான் நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

