ஈரான் போர்: பிரிட்டன், ஸ்பெயினின் நிலைப்பாட்டைச் சாடினார் டிரம்ப்

ஈரான் போர்: பிரிட்டன், ஸ்பெயினின் நிலைப்பாட்டைச் சாடினார் டிரம்ப்

2 mins read
fcadbd5e-5b9d-4b89-a1c3-3b2283abcf12
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரான்மீதான தாக்குதலுக்கு முழுமையாய் ஆதரவளிக்காததற்காக பிரிட்டனையும் ஸ்பெயினையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியிருக்கிறார்.

ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தப்போவதாக அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மிரட்டினார். “பிரிட்டன் குறித்து எனக்கு மகிழ்ச்சி இல்லை,” என்றார் திரு டிரம்ப். பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் பற்றி அவர் கருத்துரைத்தார்.

“நாங்கள் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் பேச்சு நடத்தவில்லை,” என்று திரு டிரம்ப் சொன்னார். இரண்டு உலகப் போர்களிலும் ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர்களிலும் அமெரிக்காவுக்குத் துணைநின்றுள்ளது பிரிட்டன். ஆனால் இப்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள தாக்குதலில் சேர்ந்துகொள்ள அது மறுத்துவிட்டது. அமெரிக்கப் போர் விமானங்கள் குறிப்பிட்ட தற்காப்புக் காரணங்களுக்காக பிரிட்டனின் இரண்டு ஆகாயப்படைத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திரு ஸ்டார்மர் கூறியிருந்தார். அவற்றில் ஒன்று மேற்கு இங்கிலாந்தின் குளோஸ்ட‌ஷரில் உள்ளது. மற்றொன்று இந்தியப் பெருங்கடற்பகுதியில் கூட்டு பிரிட்டி‌‌ஷ்-அமெரிக்க டியிகோ கார்‌சியா தளத்தில் இருக்கிறது. சைப்ரசில் உள்ள பிரிட்டி‌‌ஷ் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று திரு ஸ்டார்மர் கூறினார். “எங்கு இறங்குவது என்பதை முடிவுசெய்வதற்கு எங்களுக்கு மூன்று, நான்கு நாளாகிவிட்டது. பல மணிநேரம் பறப்பதற்குப் பதிலாக விமானங்கள் அங்கேயே தரையிறங்குவது வசதியாக இருந்திருக்கும்,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார். டியிகோ கார்சியா தளத்தைப் பற்றி அவர் கருத்துரைத்தார். அந்தத் தளம் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியசிடம் திரும்பக்கொடுக்க இணங்கியதற்காகத் திரு ஸ்டார்மரைத் திரு டிரம்ப் குறைகூறினார். தற்போது அந்தத் தீவுகளை மொரீ‌ஷியஸ் பிரிட்டனிடம் 99 ஆண்டுக் குத்தகைக்கு விட்டுள்ளது. “அத்தீவுகளின் தொடர்பில் பிரிட்டன் சரியாக ஒத்துழைக்கவில்லை,” என்று அமெரிக்க அதிபர் கூறினார். வெள்ளை மாளிகையில் ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்சுடன் பேச்சு நடத்தியபோது அந்தக் கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

ஸ்பெயினையும் திரு டிரம்ப் கடிந்துகொண்டார். அமெரிக்கா நெடுங்காலமாகப் பயன்படுத்திவந்த தளங்களின் வழியாக ஈரானைத் தாக்குவதற்கு ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் அனுமதி அளிக்கவில்லை. “ஸ்பெயின் மோசமாக நடந்துகொள்கிறது. எனவே அதனுடன் அனைத்து வர்த்தகங்களையும் துண்டித்துக்கொள்ளப் போகிறோம்,” என்றார் திரு டிரம்ப்.

அதன் தொடர்பில் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருப்பதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்