குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

2 mins read
எரிபொருள் கலன்கள் தீப்பிடித்துக்கொண்டன
b44f350b-83a3-4628-80e7-f6cc676a7c69
ஆளில்லா வானூர்தித் தாக்குதலுக்கு உள்ளான குவைத் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வானில் கிளம்பிய கரும்புகை. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

குவைத் சிட்டி: குவைத் அனைத்துலக விமான நிலையத்தில் ஈரான் வானூர்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்தது.

அந்தத் தாக்குதல் காரணமாக எரிபொருள் கலன்களில் மோசமான தீ மூண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“ஈரானும் அதன் ஆதரவில் இயங்கும் குழுக்களும் குவைத் அனைத்துலக விமான நிலையத்தின் மீது வெளிப்படையாக வானூர்தித் தாக்குதல்களை நடத்தியுள்ளன,” என்று குவைத் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேயுஎன்ஏ குறிப்பிட்டது.

அப்துல்லா அல்-ர‌ஜி எனும் அந்தப் பேச்சாளர், “எரிபொருள் சேகரிப்புக் கலன்கள் குறிவைக்கப்பட்டு அந்த வளாகத்தில் பெரிய அளவில் தீ மூண்டது,” என்று சொன்னார்.

பஹ்ரேன், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிலும் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதன்கிழமை காலை ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையைத் தங்களின் ஆகாயத் தற்காப்பு முறைகள் கையாண்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. கடந்த சில நாள்களாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஏமனின் ஹூதி அமைப்பு பொறுப்பேற்று வந்துள்ளது.

ஏமனிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ஏவுகணையை முறியடிக்கத் தங்களின் ஆகாயத் தற்காப்பு முறைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை மூலம் தெரிவித்தது. பிறகு நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பாதுகாப்பான இடங்களிலிருந்தும் மக்கள் வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.

அந்த ஏவுகணை முறியடிக்கப்பட்டதாகவும் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த வார இறுதியில் இஸ்ரேலை நோக்கித் தாங்கள் ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்களை நடத்தியதாக ஏமனில், ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறினர். ஈரான் போரில் ஹூதி தாக்குதல்களை நடத்தியது அதுவே முதல்முறையாகும்.

ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட இரண்டு வானூர்திகளைத் தாங்கள் முறியடித்ததாக இஸ்ரேலிய ராணுவம் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்