வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை மாதக்கணக்கில் நீடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அதனையடுத்து, எண்ணெய் விலை நான்கு ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கு மேற்கொள்ளப்படும் அரசந்திர முயற்சிகள் நிலைகுத்திப் போயிருக்கின்றன.
இந்நிலையில், திரு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது திரு புட்டின், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தார்.
அமெரிக்க அதிபர் எண்ணெய்த் துறை நிபுணர்களைச் சந்தித்துப் பேசினார். குண்டுவீசித் தாக்குவதைவிட ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிடுவது அதிகப் பலன் தரும் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு மேலும் 7.6 விழுக்காடு அதிகரித்து 119.69 ($152) அமெரிக்க டாலரானது. இதுவே, 2022ஆம் ஆண்டு உக்ரேன் போர் தொடங்கிய பிறகு ஆக அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.

