டெஹ்ரான்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியது, கடந்த ஜனவரி மாதம் உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களைப் பலவந்தமாக அடக்கியது ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு ஈரானியர்கள் வருங்காலத்தை எண்ணிக் கவலைப்படுகின்றனர்.
ஆகாயப் படைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தாலும் இணையத் தொடர்புத் துண்டிப்புகளாலும் ஈரான் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் சிக்கல்கள் இருக்கும் என்று அச்சம்
தற்போது நடப்பில் இருக்கும் போர்நிறுத்தத்தை நீடிக்கச் செய்து பூசலுக்கு முடிவுகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரானில் கடைகள், உணவகங்கள், அரசாங்க அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
எனினும், அமைதிக் காட்சிகளுக்குப் பின்னால் ஈரானின் சீர்குலைந்துபோன பொருளியல் இருக்கிறது. அரசாங்கம் மறுபடியும் அடக்குமுறையில் இறங்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது; ஆகாயத் தாக்குதல்கள் தொடர்பில் கோபமும் நிலவுகிறது.
போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது
ஹிஸ்புல்லா-இஸ்ரேல் 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) கூறியிருந்தார். போரை முடிவுக்குக் கொண்டுவர வகைசெய்யும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சொன்னார்.
எனினும், போர் முடிவுக்கு வந்தாலும் அதற்குப் பிறகுதான் உண்மையான பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று ஈரானிய மக்கள் சிலர் அஞ்சுகின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துகொண்டால் சாதாரண மக்கள்மீதான நெருக்குதல் அதிகரிக்கும் என்பது அவர்களின் கவலை.
போரின் தாக்கம், பல்லாண்டுக் காலமாக ஈரானுக்கு எதிராக நடப்பில் இருக்கும் தடை உத்தரவுகள், நாடு தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் ஈரானியர்களின் நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

