வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பதில் ஈரான் ‘மிகவும் மோசமாக’ நடந்துகொள்கிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ஈரான் அவ்வாறு செய்வது இருவாரப் போர்நிறுத்த உடன்பாடுகளை மீறிய செயல் என்று அவர் எச்சரித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குத் தீர்வை விதிக்கப்படும் என்று ஈரான் கூறியிருப்பதற்கு திரு டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமாக, சிலர் கூறுவதுபோல் கண்ணியமற்ற முறையில் செயல்படுகிறது. நாம் செய்துகொண்ட உடன்பாடு இதுவல்ல,” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருவாரப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, வளைகுடாவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள 167 கிலோமீட்டர் நீளமுள்ள நீரிணை மீண்டும் திறந்துவிடப்படும் என்று ஈரானும் அமெரிக்காவும் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்து இருந்தன.
அந்த அறிவிப்புக்குப் பின்னர், 10 கப்பல்கள் மட்டுமே அந்த நீரிணையைக் கடந்திருப்பதாகக் கடல்துறைத் தரவுகள் தெரிவித்துள்ளன.
திரு டிரம்ப் முன்னதாக வெளியிட்ட ஒரு பதிவில், “எண்ணெய்க் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் வருகின்றன. அவ்வாறு செய்யக்கூடாது. ஒருவேளை செய்தால், இப்போதே அதை நிறுத்த வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் சனிக்கிழமை ஈரானுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பங்கேற்க இருக்கிறார். சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃவ், டிரம்ப்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் இஸ்லாமாபாத் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மத்திய கிழக்கில் அமைதியை நீடிக்கச் செய்யும் வகையிலான உடன்பாடு எட்டப்படும் என்று அதிபர் நம்பிக்கையுடன் இருக்கிறார்,” என வெள்ளை மாளிகை துணை முதன்மை பத்திரிகை அலுவலர் அன்னா கெல்லி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

