ஹோர்முஸ் நீரிணை வழியே புதிய கப்பல் போக்குவரத்து, ஈரான்- ஓமன் ஒப்பந்தம்

ஹோர்முஸ் நீரிணை வழியே புதிய கப்பல் போக்குவரத்து, ஈரான்- ஓமன் ஒப்பந்தம்

1 of 2
படம்: ஏஎஃப்பி
படம்: இபிஏ

10 Aug 2026 - 7:42 pm

1 mins read

துபாய்/வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதையை வரையறுப்பது தொடர்பாக ஓமனுடன் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த முக்கியக் கடல் பாதையை மீண்டும் திறக்க அமெரிக்காவிற்கு அது பல கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பிப்ரவரி இறுதியில் ஈரான் இந்த முக்கிய எண்ணெய் வணிகப் பாதையை முடக்கியது.

இந்நிலையில், பாதுகாப்பு மீட்டெடுக்கப்படுவதற்கான உடன்பாடு ஓமனுடன் எட்டப்பட உள்ளதை அமெரிக்க அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அமெரிக்கா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் பொருளியல் தடைகளை நீக்க வேண்டும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஃக்சி வலியுறுத்தினார்.

ஈரானியச் சொத்துகளை விடுவிப்பது, வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறுவது ஆகியவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நீரிணை திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைக்குத் தீவிரப் பணவீக்கத்தாலும் நிதி நெருக்கடியாலும் தவிக்கும் ஈரானை தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் சவூதி அரேபியாவின் ‘ஜைசான்’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மக்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாள்களில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்