ஏதென்ஸ்: ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை (ஏப்ரல் 18) அவ்வழியாகச் செல்ல முயன்ற வணிகக் கப்பல்களை ஈரானியப் படைகள் தாக்கியுள்ளன.
இரு கப்பல்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கப்பல்களிலிருந்த மாலுமிகள், பணியாளர்களின் உயிருக்கு இத்தாக்குதலில் எந்தவோர் ஆபத்தும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அது எந்த நாட்டின் கப்பல் எனும் தகவல் வெளியிடப்படவில்லை.
ஈரான் நிர்ணயித்த பாதுகாப்பான பாதைகள் வழியாகப் பயணம் அனுமதிக்கப்படும் என்ற முந்தைய அறிவிப்பைத் தொடர்ந்து, பல கப்பல்கள் அந்தப் பகுதியைச் சென்றடைந்தன.
அப்பகுதியிலுள்ள கெஷ்ம், லாரக் தீவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஈரானியப் படகுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், கப்பல்கள் பயணத்தை முடிக்காமல் பின்வாங்கின.
ஓமானுக்கு வடகிழக்கே 20 கடல்மைல் தொலைவில் இச்சம்பவம் நடந்ததாக பிரிட்டிஷ் கடல்சார் வணிகச் செயல்பாட்டு முகவை தெரிவித்துள்ளது.
ஈரானியப் புரட்சிகரக் காவல்படையின் இரு படகுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒரு எண்ணெய்க் கப்பலின் மாலுமி தெரிவித்தார். கப்பலும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அவர் சொன்னார். அதேபோல் ஒரு சரக்குக் கப்பல்மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அமெரிக்கா தனது பேச்சுவார்த்தை வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படுவதாக ஈரானியக் கடற்படை வானொலிச் செய்தி வழியாக அறிவித்துள்ளது.
எந்தவொரு நாட்டைச் சேர்ந்த கப்பல்களும் இனி இப்பகுதியைக் கடக்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய வணிகத்தில் தாக்கம்
அவ்வழியே சென்ற கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கடற்பகுதியிலிருந்து நீரிணையை நோக்கி சென்றுகொண்டிருந்த இந்தியக் கப்பலான ‘பாக்யலட்சுமி’ என அடையாளம் காணப்பட்ட சரக்குக் கப்பல், வழிமறிக்கப்பட்டு திருப்பிவிடப்பட்டது. இந்தியக் கச்சா எண்ணெய் கப்பலான ‘தேஷ் சுரக்ஷா’வும் ஈரானியப் படைகளால் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்தியக் கப்பல்கள் உட்பட ஏறக்குறை 20 கப்பல்கள் ஓமானை நோக்கிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் 20 விழுக்காடு எண்ணெய், திரவமாக்கப்பட்ட எரிவாயு செல்லும் இப்பாதையில், கிட்டத்தட்ட 20,000 மாலுமிகளும் நூற்றுக்கணக்கான கப்பல்களும் தற்போது சிக்கித் தவிக்கின்றன.

