கத்தார்: அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு ஈரான், அமெரிக்காவிற்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கா இந்த நிபந்தனைகளை நிராகரித்தால் ஒரு ‘முடிவு செய்யும் போருக்கு’ தாம் தயாராக இருப்பதாக டெஹ்ரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சன் ரெசாய், கத்தார் மூலமாக இந்த நிபந்தனைகளை வாஷிங்டனுக்கு அறிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி தெரிவித்தது.
போரை அனைத்து முனைகளிலும் முடிவுக்குக் கொண்டுவருவது, முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவிப்பது, கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறுவது ஆகியவை இந்த முதன்மை நிபந்தனைகளில் அடங்கும்.
அமெரிக்கா தான் உருவாக்கிய சிக்கலில் இருந்து தப்பிக்க ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவிலும் அல் ஜசீரா நேர்காணலிலும் பேசிய ரெசாய் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மிரட்டல்களால் எந்தப் பயனும் இல்லை. எத்தகைய அமெரிக்கத் தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரானிய ராணுவம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் அண்மையில் பல போர்முனைகளைக் கொண்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அமெரிக்கக் கப்பலுக்கு அருகே சோதித்துப் பார்த்ததாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை வட்டாரத்திலுள்ள அமெரிக்கத் தளங்கள், வணிக நிறுவனங்களைக் குறிவைக்கும் என்றும் எச்சரித்தார்.
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் தயாராக உள்ளது என்றார் அவர்.
பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரமடைந்துள்ள இந்த மோதலை முடிவுக்குக்கொண்டுவர கத்தாரும் பாகிஸ்தானும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
