கெய்ரோ: அமெரிக்கா மீது புதிய பொருளியல் போர் தொடுக்கப்போவதாக ஈரான் அச்சுறுத்தி உள்ளது.
அத்துடன், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது அதிநவீன ஏவுகணையைப் பாய்ச்சி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒன்றின்மீது மற்றொன்று தாக்குதல்களை நடத்திய சில நாள்களிலேயே, இந்தப் போர் மேலும் தீவிரமடையும் அபாயத்தை புதிய சூழல் உருவாக்கியுள்ளது.
ஆறு மாதங்களாக நீடிக்கும் போர், அவ்வப்போது போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதும் பின்னர் மீண்டும் தீவிரமடைவதுமான சுழற்சியாக மாற்றம் கண்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈரானின் மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது சனிக்கிழமை (செப்டம்பர் 5) தாக்குதல் நடத்தியது. ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல்களை அமெரிக்கா கடைசியாகப் பதிவு செய்திருந்தது அன்றையதினம் தான்.
பல அமெரிக்கக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அதே வேளை, ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி ஆயுதப் படையினர் சவூதி அரேபியாவின் பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 73 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தகவலை ஏமனில் உள்ள சவூதி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) வெளியிட்டார்.
அரசதந்திர முயற்சிகளில் தேக்கநிலை நிலவுவதால், அமெரிக்கா-ஈரான் போர் பேரளவிலான வட்டார போராகப் பரவும் அபாயம் நிலவுகிறது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா முயன்றபோதிலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான கப்பல் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து முடக்கி வருகிறது.
அதனால், இந்த வாரம் நீரிணை வழியான சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் மந்தமடைந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக புதிய கப்பல் போக்குவரத்துப் பாதையின் வரைபடங்களுடனான புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை வளைகுடாப் பகுதியில் வரவிருக்கும் நாள்களில் அறிவிக்க இருப்பதாக ஈரான் உறுதிபூண்டுள்ளது.
இருப்பினும், அதற்கான முழு விவரங்கள் எப்போது வெளியாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


