ஈராக் பேரங்காடியில் தீ; 69 பேர் உயிரிழப்பு

1 mins read
95e0fa1d-9ecd-45a1-9ccc-78d34a1c043a
அல் குத் நகரில் தீக்கிரையான வணிக வளாகம். - படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈராக்கின் கிழக்குப் பகுதியிலுள்ள அல் குத் நகரில் இருக்கும் பேரங்காடி ஒன்றில் புதன்கிழமை (ஜூலை 16) இரவு நேர்ந்த தீ விபத்தில் குறைந்தது 69 பேர் மாண்டுவிட்டனர்; மேலும் 11 பேரைக் காணவில்லை.

ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் அந்தப் பேரங்காடி திறக்கப்பட்டதாக பிபிசி செய்தி தெரிவித்தது.

அந்த ஐந்து மாடிக் கட்டடம் தீப்பற்றி எரிவதையும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடியதையும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டின.

“மாண்டவர்களில் 59 பேரின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளோம். பத்து பேரின் உடல்கள் மோசமாக எரிந்துவிட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் நிலவுகிறது,” என்று நகரச் சுகாதார அதிகாரி ஒருவர் ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்கு இடையே இன்னும் பல உடல்கள் மீட்கப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், 48 மணி நேரத்தில் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் வெளியிடப்படும் என்று மாநில ஆளுநர் சொன்னதாக ஈராக் அரசு ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்தக் கட்டடத்தின் உரிமையாளர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்