புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 169 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கம் இப்போது அதிகாரபூர்வமாக அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) உறுதிப்படுத்தியது.
நிதியை பறிமுதல் செய்வதற்கான அரசுத் தரப்பு விண்ணப்பத்தை எதிர்த்துப் போட்டியிட வேண்டாம் என்ற அவ்விருவரின் முடிவைத் தொடர்ந்து இது நடந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார்.
“அதிகாரபூர்வமாக, பணம் இப்போது அரசாங்கத்திற்குச் சொந்தமாகியுள்ளது. அதை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றும் செயல்முறை இன்று தொடங்குகிறது, விரைவில் அரசாங்கக் கணக்கில் அது பிரதிபலிக்கக்கூடும்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இருப்பினும், வழக்கில் எந்த தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டுமா என்பதை அரசுத்தரப்பு வழக்கறிஞர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று திரு அசாம் கூறினார்.
பெர்னாமா ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட செய்தியின்படி, முகமது அனுவாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இஸ்மாயில் சப்ரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 169 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தைப் பறிமுதல் செய்ய ஆணையம், மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தது.
இந்தப் பணத்தில் மலேசிய ரிங்கிட் 14,772,150, சிங்கப்பூர் வெள்ளி 6,132,350, அமெரிக்க டாலர் 1,461,400, சுவிஸ் பிராங்க் 3 மில்லியன், யூரோ 12,164,150, ஜப்பானிய யென் 363,000,000, பிரிட்டிஷ் பவுண்ட் 50,250, நியூசிலாந்து டாலர் 44,600, ஐக்கிய அரபு சிற்றரசின் டர்ஹம் 34,750,000, ஆஸ்திரேலிய டாலர் 352,850 ஆகியவை கையகப்படுத்தப்பட்ட ரொக்கத்தில் அடங்கும்.