கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்டுள்ள ஊழல், கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்குவது தொடர்பான வழக்கு விசாரணையில் அந்நாட்டின் ஊழல் ஒழிப்புப் பிரிவு (எம்ஏசிசி) 36 தனிநபர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது.
ஹரியான் மெட்ரோ ஊடகம் செவ்வாய்க்கிழமை (மார்க் 11) இத்தகவலை வெளியிட்டது. திங்கட்கிழமை (மார்ச் 10) நிலவரப்படி 32 சாட்சிகளிடமிருந்தும் முன்பு இஸ்மாயில் சப்ரிக்குப் பணியாற்றிய அதிகாரிகள் நால்வரிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டது.
“இந்நிலையில், மேலும் வாக்குமூலம் பெற விரைவில் 23 புதிய சாட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். வேறு நால்வர் தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றனர்,” என்று தகவல் தெரிந்த ஒருவர் கூறியதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது.
இஸ்மாயில் சப்ரி, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) எம்ஏசிசி தலைமையகத்தில் முன்னிலையாகவிருந்தார். ஆனால், உடல்நலக் காரணங்களினால் அவர் முன்னிலையாகவில்லை.
இஸ்மாயில் சப்ரி இன்னும் மருத்துவ விடுப்பில் இருப்பதால் அவர் நாளை முன்னிலையாவார் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பான்னி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி தனது சொத்து குறித்த விவரங்களைத் தெரியப்படுத்தினார். பிறகு பிப்ரவரி 19ல் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
எம்ஏசிசி சட்டம் 2009 மற்றும் கள்ளப்பணம் நல்லப்பணமாக்குவதைத் தவிர்ப்பது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்குவதை ஒழிப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருமானம் ஈட்டப்படுவதை ஒழிப்பது ஆகியவற்றுக்கான சட்டம் (AMLATFPUAA) இரண்டுக்கும்கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
தாய்லாந்து பாட், பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, சுவிட்சர்லாந்து ஃபிராங்க் உள்ளிட்ட நாணயங்களில் சுமார் 170 மில்லியன் ரிங்கிட் (51.12 மில்லியன் வெள்ளி) ரொக்கத்தை எம்ஏசிசி பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.