தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காலிகப் போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்

2 mins read
c1ae7a16-28ba-487c-bc08-44b14874ba63
காஸாவில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் ரமலான் மாதம் முழுதும் நீடிக்கும். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கெய்ரோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தூதர் ஸ்டிவ் விட்கோஃப் என்பவரின் பரிந்துரையை ஏற்று இஸ்ரேல் ரமலான் மாதத்தில் காஸாவில் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவடையும் தருணத்தில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இணங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2ஆம் தேதி) கூறியது.

திரு விட்கோஃப்பின் பரிந்துரைப்படி போர் நிறுத்த முதல் நாளில் ஹமாஸ் பிணை பிடித்துள்ள கைதிகளில் பாதிப் பேர், அவர்கள் இறந்திருந்தாலும் உயிரோடு இருந்தாலும், விடுவிக்கப்படுவர். மீதிப் பிணைக் கைதிகள் நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிரந்தரப் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தற்போதையப் போர் நிறுத்தத்தை நீடிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் தகவல் வெளியிட்டது. எனினும், திரு விட்கோஃப்பின் பரிந்துரை இஸ்ரேலிடம் எப்பொழுது அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.

திரு நெட்டன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துரைத்த ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இது இஸ்ரேல் ஏற்கெனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை கைவிடும் செயல் என்று கூறியது.

“இப்படி மாறி மாறிப் பேசுவதால் பிணைக் கைதிகள் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியாது. அவர்கள் தொடர்ந்து சிரமப்படுவதும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்குமே இது வழிவிடும்,” என்று ஹமாசிடம் தொடர்புடைய ஷெபாப் செய்தி நிறுவனமும் பாலஸ்தீன ஊடகங்களும் விளக்கின.

குறிப்புச் சொற்கள்