ஜெருசலம்: காஸா போர் தொடங்கக் காரணமாக இருந்த ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில் இஸ்ரேல் சனிக்கிழமை (அக்டோபர் 5) முதல் அதன் படைகளை விழிப்புநிலையில் வைத்துள்ளது.
ஈரான் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் அத்தகவலை வெளியிட்டார். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில் அத்தகவல் வெளியானது.
சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று ஹமாஸ், இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதனையடுத்து காஸா போர் மூண்டது.
வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) அந்நிகழ்வின் ஓராண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படவுள்ளது. அந்நாளை எதிர்பார்த்துக் கூடுதல் படைகளை நிறுத்தியிருப்பதாக இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தொலைக்காட்சிவழி அறிவித்தார். இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதை முன்னிட்டு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,205 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள்.
அதற்கு ஓராண்டுக்குப் பிறகும் காஸாவில் போர் தொடர்கிறது. அதேவேளை, ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் கவனம் திரும்பியுள்ளது.