தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு

2 mins read
da1dff80-f4b3-4c72-9946-91decbefff31
இஸ்ரேலும் ஹமாசும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடும் பாலஸ்தீன மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஈராண்டுகளாக நடந்துவரும் போர் தற்போது அமைதியை நோக்கி நகர்கிறது.

இஸ்ரேலும் ஹமாசும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (அக்டோபர் 8) அறிவித்தார்.

அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும். அதேபோல் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததையடுத்துத் தற்போது திரு டிரம்ப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.

“இதை நான் பெருமையுடன் சொல்வேன். இஸ்ரேலும் ஹமாசும் அமைதிக்கான முதற்கட்ட திட்டத்தை ஒப்புக்கொண்டன,” என்று திரு டிரம்ப் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டார்.

கடந்த வாரம் திரு டிரம்ப், இஸ்ரேல்-ஹமாஸ் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை வெளியிட்டார். அதை இஸ்ரேலும் ஹமாசும் ஏற்றுக்கொண்டன.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் அந்த இரு தரப்பை மட்டும் பாதிக்காமல் மத்தியக் கிழக்கு வட்டாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈரான், ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் போர் பரவியது உலக அளவில் பதற்றத்தை உண்டாக்கியது.

“கடவுளின் உதவியோடு அனைவரையும் தாயகத்திற்குக் கொண்டு வருவோம்,” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்‌சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கத் தேவையான நடவடிக்கையைத் தான் எடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் சக நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

ஹமாஸ் படையினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

அதையடுத்து காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்