காஸா: தெற்கு காஸாவில் மார்ச் 23 அன்று 15 அவசரகால உதவிக்குழு ஊழியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது வீரர்கள் செய்த தவற்றை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய செம்பிறைச் சங்கத்தின் வாகனங்கள், ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் கார், காஸாவின் குடிமைத் தற்காப்புப் படையில் ஒரு தீயணைப்பு வாகனம் ஆகியவை ராஃபா அருகே தீக்கிரையாகின.
விளக்குகள் எரியாமலோ அவரசநிலை சமிக்ஞை இன்றியோ செல்லும் வாகனங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவற்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இதற்குமுன் இஸ்ரேல் கூறியிருந்தது. வாகனங்களின் செயல்பாடு முன்கூட்டியே ராணுவத்துடன் ஒருங்கிணைக்கப்படவில்லை அல்லது ராணுவத்தின் அனுமதியைப் பெறவில்லை என்றும் அது கூறியது.
கொல்லப்பட்ட மருத்துவ உதவியாளர்களில் ஒருவரால் படமாக்கப்பட்ட கைப்பேசி காட்சிகள், காயமடைந்த மக்களுக்கு உதவ அவர்கள் சென்றபோது, வாகனங்களில் விளக்குகள் இருந்ததைக் காட்டின.
இஸ்ரேலிய தற்காப்புப் படை (ஐடிஎஃப்) குறைந்தது ஆறு மருத்துவ உதவியாளர்கள் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகிறது. ஆனால் இதுவரை அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வழங்கவில்லை. எனினும், ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அவர்கள் நிராயுதபாணியாக இருந்தனர் என்பதை அது ஒப்புக்கொண்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் முதலில் பகிர்ந்த கைப்பேசி காணொளியில், அந்த வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டபோது, எந்த எச்சரிக்கையுமின்றி, விடிவதற்கு முன்னதாகவே அவற்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதைக் காட்டுகிறது.
கொல்லப்பட்ட 15 ஊழியர்களின் உடல்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வீரர்கள் மணலில் புதைத்ததாக அதிகாரிகள் கூறினர். போக்குவரத்தைச் சரிசெய்வதற்காக வாகனங்கள் அகற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்.
ஐநா உட்பட அனைத்துலக அமைப்புக்கள் அந்தப் பகுதிக்கு பாதுகாப்பான பாதையை ஏற்பாடு செய்யவோ அல்லது அந்த இடத்தை கண்டுபிடிக்கவோ முடியாததால் சம்பவம் நடந்து ஒரு வாரம் வரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
உதவிக் குழு ஒன்று உடல்களைக் கண்டுபிடித்தபோது, சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களில் ஒருவரான ரெஃபர்ட் ராட்வானின் கைப்பேசியையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
இஸ்ரேலிய தற்காப்புப் படை சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியது. செம்பிறைச் சங்கமும் இதர அனைத்துலக அமைப்புகளும் தன்னிச்சையான விசாரணை கோரியுள்ளன.