கைரோ: வட காஸாவில், ‘பீட் லஹியா’ நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல்போயினர்.
அதோடு, பலர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்தத் தாக்குதல் கொடூரமானது என்று அமெரிக்கா கூறியது.
மாண்டோரில் குறைந்தது 20 பேர் குழந்தைகள் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
“பாதிக்கப்பட்டோரில் சிலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். வேறு சிலர் சாலைகளில் உள்ளனர். அவசர மருத்துவ வாகன, குடிமைத் தற்காப்பு அதிகாரிகளால் அவர்களைச் சென்றடைய முடியவில்லை,” என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
அக்டோபர் 29ஆம் தேதி பின்னேரத்தில், மாண்டோர் எண்ணிக்கை 93ஆக இருந்தது என காஸா அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குநர் இஸ்மாயில் அல் தவாப்டா கூறினார்.
இஸ்ரேலிடமிருந்து இதன் தொடர்பில் உடனடியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடக அலுவலகம் பெரும்பாலான நேரங்களில் மரண எண்ணிக்கையைக் கூட்டிச் சொல்லும் என்று இஸ்ரேலிய ராணுவம் அடிக்கடி குறைகூறி வந்துள்ளது.
அதிகமான மாண்டோர் எண்ணிக்கை குறித்து கவலைப்படுவதாக இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா கூறியது. “அது கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள கொடூரமான சம்பவம்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மேத்யூ மில்லர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலிய அரசாங்கத்திடம் நடந்தது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விவரம் கேட்டுள்ளதாகக் கூறிய திரு மில்லர், மாண்டோரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று கூறும் அறிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் சொன்னார்.
‘பீட் லஹியா’ தாக்குதலில் காயமடைந்தோர் பராமரிப்பைப் பெறமுடியவில்லை என்று அமைச்சு கூறியது. அருகில் உள்ள ‘கமல் அட்வான்’ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதே அதற்குக் காரணம் என்று அது தெரிவித்தது.

