காஸா நகர்: காஸாவில் இஸ்ரேலியப் படையினர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
நீர் விநியோக இடத்தில் இருந்த பிள்ளைகள் சிலரும் கொல்லப்பட்டோரில் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை நிலைகுத்திப்போன நிலையில் இந்தப் புதிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே 21 மாதங்களாக நீடித்த கடும் மோதலை அடுத்துக் கடந்த ஒரு வாரமாகத் தற்காலிகச் சண்டை நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
ஆனால் அதற்கு முட்டுக்கட்டை இடுவதாக, கத்தார் தலைநகர் தோஹாவில் ஜூலை 12ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பும் ஒன்றையொன்று குறைகூறின.
இதற்கிடையே, காஸாவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருப்பதாகவும் அதனால் மீட்புப் பணிகள், மருத்துவப் பராமரிப்பு, உணவுத் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகள் மோசமாகி வருவதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தைச் சார்ந்த பல்வேறு குழுக்கள் எச்சரித்துள்ளன.