ஜெனிவா: காஸாவுக்கு உதவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முக்கிய உதவி அமைப்பை தடை செய்வதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 28) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிணைக் கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை பரிசீலிக்கப்பட்டுவந்த வேளையில் இஸ்ரேல் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னர் அமெரிக்காவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றமும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.
பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் UNRWA அமைப்பை இஸ்ரேல் மற்றும் கிழக்கு ஜெருசலத்தில் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
“பயங்கரவாத அமைப்பான ஹமாசுக்கும் UNRWAவுக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது, அதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது,” என்று இஸ்ரேலின் நாடாளுமன்ற உறுப்பினர் யூலி எடெல்ஸ்டைன் தெரிவித்தார். இந்த மசோதாவை முன்மொழிந்தவரும் இவர் தான்.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹமாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இன அழிப்பை மேற்கொள்வதாக இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பும் சாடியுள்ளது.
இதற்கிடையே சில மேற்கத்திய நாடுகளும் இஸ்ரேலின் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.
இஸ்ரேலின் நடவடிக்கை மிகவும் அக்கறைக்குறியது என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
UNRWAவுக்கு தடை விதிப்பதால் காஸா, மேற்குக்கரை, ஈஸ்ட் ஜெருசலம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்காமல் போகக்கூடும் என்று ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளது.
UNRWAவின் பெயரைக் கெடுக்கும் விதமாக இஸ்ரேல் நடந்துகொள்கிறது என்று அவ்வமைப்பின் தலைவர் பிலிப் லஸரினி தெரிவித்தார்.
உணவு, தங்குமிடம், அத்தியாவசிய சுகாதார பொருள்கள் உள்ளிட்டவை UNRWA வழங்குகிறது. அதை நிறுத்தினால் காஸாவில் பேரழிவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாக வடக்கு காஸாவில் கடுமையான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதனால் அங்கு உணவு, தண்ணீர் இல்லாமல் மக்கள் வாடுகின்றனர்.
தற்போது இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்துவதால் இது விரைவில் முழுப்போராக மாறக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.