தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாஸ் மிரட்டலுக்குப் பிறகு தென் காஸாவில் இஸ்‌ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்

2 mins read
18fee8dd-c417-42c1-8955-7626d6cb8d50
பல மாதங்களாக நடக்கும் கடுமையான தாக்குதல்களாலும் சண்டைகளாலும் காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு நிலைகுலைந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: இஸ்‌ரேல், காஸாவின் முக்கிய நகரில் டிசம்பர் 11ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கைதிகளை விடுவிப்பதற்கான தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் உயிருடன் வெளியேற முடியாது என்று ஹமாஸ் குழு எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ் அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்ரேல்மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையிலான பூசல் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 240 பேர் பிணைபிடிக்கப்பட்டதாகவும் இஸ்‌ரேலின் புள்ளிவிவரங்கள் காட்டின.

அதற்குப் பதிலடியாக, காஸாமீது இஸ்‌ரேல் ராணுவத் தாக்குதலை மேற்கொண்டது. அதில் குறைந்தது 17,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும் என ஹமாசின்கீழ் இயங்கும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

டிசம்பர் 11ஆம் தேதியன்று இஸ்‌ரேல், கான் யூனிஸ் நகரைத் தாக்கியதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கூறினார். இதற்கிடையே, இஸ்‌ரேலிய ராணுவ வீரர்கள் சுரங்கப்பாதையைத் தேடிக்கொண்டிருந்த வீடு ஒன்றைத் தாங்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக இஸ்லாமிய ஜிஹாத் எனும் குழுவைச் சேர்ந்த பாலஸ்தீனப் போராளிகள் கூறியுள்ளனர்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை பாய்ச்சப்பட்டதாகவும், காஸா நகரையும் கான் யூனிஸ் நகரையும் சுற்றிக் கடுமையான சண்டைகள் நடந்ததாகவும் இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

காஸாவில் இன்னும் 137 பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்‌ரேல் கூறுகிறது. இஸ்‌ரேல் சிறைகளில் கிட்டத்தட்ட 7,000 பாலஸ்தீனர்கள் இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாதக்கணக்கில் நீடிக்கும் கடுமையான தாக்குதல்களாலும் சண்டைகளாலும் காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு நிலைகுலைந்து போயுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் இப்போது செயல்படுவதில்லை. கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்