இஸ்ரேலிய ராணுவம், ஏமன் தலைநகர் சானாவின் தெற்கே எரிசக்தி உள்கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை குறிவைத்ததாகக் கூறியிருக்கிறது.
எரிசக்தி உள்கட்டமைப்பை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழு பயன்படுத்தியதாக அது சொன்னது. ஹசிஸ் எரிசக்தி நிலையம் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
தனக்கு எதிராக ஹூதி தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியே அது என்று இஸ்ரேல் கூறியது.
ஹசிஸ் எரிசக்தி நிலையத்தின் மீது தனது கடற்படை தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது.
சானாவில் இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இருப்பினும் வெடிப்பால் மூண்ட நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது.
காஸா போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹவுதி குழு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அவற்றில் பெரும்பாலானவை இலக்கை எட்டுவதற்கு முன் இடைமறிக்கப்பட்டன.
ஏமனில் ஹூதி குழுவினருக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்கெனவே தாக்குதல் தொடுத்துள்ளன.
இவ்வாண்டு (2025) மே மாதம், யாரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்கா ஹூதி குழுவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டது. அதன்படி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா இணங்கியது. அதற்குக் கைமாறாக செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுப்பதை ஹூதி நிறுத்த வேண்டும். இருப்பினும் அந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஹூதி கூறுகிறது.