காஸாசிட்டி: ஹமாஸ் போராளிகள் குழு கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் வசமிருக்கும் இஸ்ரேலியப் பிணையாளிகளை விடுவிக்கப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸாமீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இஸ்ரேல் அதைக் கண்டுகொள்ளாமல் காஸாவில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
சனிக்கிழமை (அக்டோபர் 4) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகக் காஸா சுகாதார அமைப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3), அதிபர் டிரம்ப் காஸாமீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இதுவரை 36 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.
மாண்டவர்களில் 18 பேர் வெவ்வேறு இடங்களில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலில் இறந்தனர்.
காஸா நகரத்திற்கு அருகே அமைந்துள்ள துஃபா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் மாண்டனர். சிலர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலில் பல கட்டடங்களும் சேதமாகின.
தங்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஒரு ஹமாஸ் போராளி கண்டறியப்பட்டதால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய ராணுவப்படை காஸாவில் இருக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.