இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி

இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி

படம்: ராய்ட்டர்ஸ்

30 Oct 2026 - 5:24 pm

2 mins read

ஜெருசலம்: இஸ்ரேல் பொதுத்தேர்தலின் இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) முன்னேரத்தில் வெளியாகியுள்ளன.

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கூட்டணிக்கோ முக்கிய எதிர்த்தரப்புக் கூட்டணிக்கோ புதிய அரசாங்கம் அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று அந்நாட்டின் மத்திய தேர்தல் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அங்குப் பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய அரசியல் நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.

இஸ்‌ரேலிய நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. ஆனால், நெட்டன்யாகுவின் லிக்குட் கட்சியும் அதன் வலதுசாரி கூட்டணிக் கட்சிகளும் 53 இடங்களை மட்டுமே வென்றுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற 64 இடங்களைவிட இது குறைவு.

முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான முக்கிய எதிர்த்தரப்புக் கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இரண்டு அரபுத் தரப்புக் கட்சிகள் தங்களது வரலாற்றிலேயே ஆக அதிகமாக 19 இடங்களைப் பிடித்துள்ளன.

அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 4ஆம் தேதி முறைப்படி சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதன்பின் அவர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, ஆட்சி அமைக்க யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை முடிவுசெய்வார். இதனிடையே, எதிர்த்தரப்புத் தலைவர் ஐசன்கோட்டிடம் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முதல் வாய்ப்பை அதிபர் வழங்கக்கூடும் என்று இஸ்ரேல் ஜனநாயகக் கழக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்‌ரேலில் நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் நெட்டன்யாகு மீதான பொது வாக்கெடுப்பாகவும் இத்தேர்தல் கருதப்பட்டது.

இம்முறை வாக்காளர் வருகை 1999ஆம் ஆண்டிற்குப்பின் ஆக அதிகமாகப் பதிவானது. அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பொறுப்பேற்க மறுத்த நெட்டன்யாகு மீது பொதுமக்களுக்குக் கோபம் இருந்தபோதிலும், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து வீழ்த்த எதிர்த்தரப்பால் இயலவில்லை. புதிய அரசாங்கம் அமையும் வரை நெட்டன்யாகுவே தற்காலிகப் பிரதமராக நீடிப்பார் என்பதால், இந்த அரசியல் இழுபறி அவருக்கே சாதகமாக அமையக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்