தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெட்டன்யாகு: பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டது

1 mins read
e06feee1-f1e4-4320-9f3e-d969b4cd3ca8
போர் நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக ஏற்று ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் வலியுறுத்தி அவருக்கு நெருக்குதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோஹா: காஸா முனையில் ஹமாஸ் அமைப்பு பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) அறிவித்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக ஏற்று ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் வலியுறுத்தி அவருக்கு நெருக்குதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தருவது குறித்து வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) இஸ்‌ரேலிய அமைச்சரவை கலந்துரையாடி முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தருவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியுள்ளதாக முதலில் செய்தி வெளியிடப்பட்டது.

போர் நிறுத்தம் குறித்து இஸ்‌ரேலிய அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காஸா மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்‌ரேல் தாக்குதல்களைத் தொடர்வதாகவும் இதன் விளைவாக குறைந்தது 86 பேர் மாண்டுவிட்டதாகவும் வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, கடந்த 15 மாதங்களாக மத்திய கிழக்கைப் புரட்டி எடுத்துவரும் காஸா போர், இந்த வாரயிறுதியில் முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (ஜனவரி 19) நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா கூறியது.

போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஹமாஸ் கடப்பாடு கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் இஸாட் அல் ரெஷிக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்