தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தயார்நிலை வீரர்கள் வரும்படி அழைக்கும் இஸ்ரேல்: காஸா போர்

2 mins read
71350d81-9488-4651-91af-1cf1e7b5e400
ஹமாஸ் தரப்புக்கு அழுத்தம் கொடுக்க இஸ்ரேலிய ராணுவம் அதன் நடவடிக்கையைக் காஸாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

காஸாவில் உள்ள நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இஸ்ரேலிய ராணுவம் தயார்நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீரர்களைத் திரும்ப வரும்படி அழைத்துள்ளது.

காஸாவில் உள்ள பிணையாளிகளை மீட்டு ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை முறியடிக்கும் இலக்குடன் கூடுதல் அழுத்தம் கொடுக்க இஸ்ரேலிய ராணுவம் முற்படுகிறது.

சண்டைநிறுத்த உடன்பாடு முறிந்ததை அடுத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் அண்மைய தாக்குதல் பிணையாளிகளின் விடுதலையை உறுதிசெய்யத் தவறியதாகக் கவனிப்பாளர்கள் குறைகூறினர்.

இஸ்ரேலிய ராணுவம் புதிய பகுதிகளில் செயல்பட்டு நிலத்துக்கு மேலும் நிலத்துக்கு அடியிலும் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளது.

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை இஸ்ரேலிய ஊடக அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால் அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வருகைக்கு முன் அது நடைபெறாது என்று அறிக்கைகள் தெரிவித்தன.

இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் அதன் நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை திரு நெட்டன்யாஹுவிடம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 2) முன்வைத்தது.

அண்மை வாரங்களில் ஆயிரக்கணக்கான தயார்நிலை வீரர்கள் நெட்டன்யாஹு அரசாங்கம் போரை நிறுத்தி உடன்பாட்டை எட்டுவதில் கவனம் செலுத்தும்படி கூறும் கடிதங்களில் கையெழுத்திட்டனர்.

அனைத்துலக சமரசப் பேச்சுகள் சண்டைநிறுத்தத்துக்கான புதிய உடன்பாட்டை எட்டவும் ஹமாஸ் வசமுள்ள 59 பிணையாளிகளின் விடுதலையையும் உறுதிசெய்யத் தவறியது.

மார்ச் 18ஆம் தேதி இஸ்ரேல் அதன் ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதிலிருந்து புதிய இஸ்ரேலியப் பிணையாளிகள் விடுவிக்கப்படவில்லை.

காஸாவின் மிகப் பெரிய பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை மீண்டும் இழந்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் தரப்புமீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவிருப்பதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்