டெல் அவிவ்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தும் குழுக்களை கத்தாருக்கு வருமாறு அழைத்துள்ளார்.
காஸாவில் போர் நிறுத்தம் தொடரும் நிலையில் மற்ற பிணைக் கைதிகளை விரைவில் வெளியிட நெட்டன்யாகு தீவிரம் காட்டிவருகிறார்.
போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து ஐந்து முறை பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்துள்ளனர்.
இதற்கிடையே, சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடந்த ஐந்தாவது பிணைக் கைதிகள் விடுவிப்பில் மூன்று பேர் ஹமாஸ் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, ஹமாஸ் படையை கட்டாயம் ஒழித்துக்கட்டுவேன் என்று திரு நெட்டன்யாகு சூளுரைத்தார். மேலும், அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
விடுதலை செய்யப்பட்ட மூவரும் கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் உடல்நிலை குறித்து கவலைகளும் எழுந்துள்ளன.
ஆனால், கடுமையான போர்ச் சூழலிலும் பிணைக் கைதிகளை நல்லமுறையில் பார்த்துக்கொண்டதாக ஹமாஸ் தற்காத்துப் பேசியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் 183 பாலஸ்தீனக் கைதிகளை அதன் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது. அதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலிய சிறையில் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக பாலஸ்தீன சிறைக்கைதிகளுக்கான தன்னார்வக்குழு தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் 41 பேர் மேற்குக் கரையைச் சேர்ந்தவர்கள். 131 பேர் காஸாவுக்கு அனுப்பப்பட்டனர். 4 பேர் கிழக்கு ஜெருசலத்தை சேர்ந்தவர்கள். மற்ற 7 பேர் எகிப்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.
தற்போது நடப்பில் உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனால் இது காஸாவில் போரை நிரந்தரமாக நிறுத்த வழிவகுக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் ஹமாஸ் தரப்பு தலைவர்கள் இஸ்ரேல் தனது வேலைகளை சரியாக செய்யவில்லை என்று குறைகூறியுள்ளனர். இதனால் மீண்டும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

