மேற்குக் கரையில் அதிகமான சிறாரைக் கொல்லும் இஸ்ரேல்

மேற்குக் கரையில் அதிகமான சிறாரைக் கொல்லும் இஸ்ரேல்

2 mins read
8c01d3de-2cee-4431-86c3-bb94f1c26d97
ஆகஸ்ட் 9ஆம் தேதி எடுக்கப்பட்ட இப்படத்தில் காணப்படும் மேற்குக் கரையின் நாப்லுஸ் நகரம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ரமல்லா: காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல், கூடுதலான பாலஸ்தீன சிறாரையும் பதின்ம வயதினரையும் கொல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸா போர் வெடித்தது. அதிலிருந்து மேற்குக் கரையில் 235 சிறாரும் பதின்ம வயதினரும் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டதாக பி’டிசெலெம் எனும் இஸ்ரேலிய மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.

2005லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதந்தோறும் சரசரியாக ஒரு பாலஸ்தீன சிறுவர் அல்லது பதின்ம வயதினர் கொல்லப்பட்டதாக அது குறிப்பிட்டது. அந்த எண்ணிக்கை அதிகமானது என்றாலும் தற்போதிருப்பதைவிடக் குறைவு என்று பி’டிசெலெம் சுட்டியது.

அமைப்பின் கணக்கின்படி 2023ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை மாதந்தோறும் ஏழாக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு எதிராக நெட்டன்யாகு கண்டனம்

இதற்கிடையே, மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் குடிபுகுந்த இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) குஸ்ரா எனும் கிராமத்தைத் தாக்கினர். அப்பகுதியில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகப் பதற்றம் நீடித்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற தாக்குதல்களுக்கு அவர் கண்டனம் தெரிவிப்பது அரிது.

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் நாப்லுஸ் எனும் கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் இருந்த வீடுகளுக்கு உதவிப் பொருள்கள் சென்றடைவதை ஏற்கெனவே அங்கு குடிபுகுந்த இஸ்ரேலியர்கள் தடுத்தனர். அதனால் அங்கு குடியிருப்பாளர்கள் சிக்கித் தவிக்க நேரிட்டது. அதையடுத்து என்றும் இல்லாத வகையில் அமெரிக்கத் தூதர் கண்டனம் தெரிவித்தார்.

அதற்குப் பல வாரங்கள் கழித்தும் அவ்வட்டாரத்தில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.

சனிக்கிழமை குடிபுகுந்த இஸ்ரேலியர்கள் பலர் குஸ்ரா கிராமத்தைச் சென்றடைந்ததாக அதன் குடியிருப்பாளர்களும் ராணுவத்தினரும் தெரிவித்தனர். அந்த இஸ்ரேலியர்கள் குடியிருப்பாளர்கள்மீது கல்லெறிந்ததாகவும் பாலஸ்தீனர்கள் இருந்த வீட்டுக்குள்ளேயே அவர்கள் ஒளிந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாலஸ்தீன வட்டாரங்களில் 500,000க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் குடிபுகுந்து வாழ்ந்துவருகின்றனர். கிட்டத்தட்ட முன்று மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு மத்தியில் அவர்கள் வாழ்கின்றனர்.

அனைத்துலகச் சட்டத்தின்படி அந்தக் குடியிருப்புப் பகுதிகள் சட்டவிரோதமானவை.

1967ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல், மேற்குக் கரையை ஆக்கிரிமித்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்