டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம், காஸாவை ஆக்கிரமிக்க அங்குக் கடும் தரைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இஸ்ரேலிய அதிகாரிகள் அதனைக் கூறினர்.
இஸ்ரேலிய ராணுவம் அதுகுறித்து உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
காஸா நகரைக் கைப்பற்றுமாறு ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இஸ்ரேல் மீது 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீர்த் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவின் கோட்டை காஸா நகர்தான் என்று அவர் சொன்னார்.
அதன் பின்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவை மூர்க்கமாகத் தாக்கிவருகிறது. பரவலான சேதம், அதிக அளவில் மக்கள் இடமாற்றம், உணவுக்கும் தண்ணீருக்கும் கடும் பற்றாக்குறை என மனிதாபிமானப் பேரழிவைச் சந்திக்கிறது காஸா.
காஸா நகரின் சுற்றுவட்டாரங்களில் வாரக்கணக்கில் இஸ்ரேலியப் படைகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நகரின் நடுப்பகுதியை அவை நெருங்குகின்றன. அங்கு ஒரு மில்லியன் பாலஸ்தீனர்கள் அடைக்கலம் நாடியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
“காஸா பற்றி எரிகிறது,” என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) பதிவிட்டார்.
“இஸ்ரேலியத் தற்காப்புப் படை இரும்புக் கரம் கொண்டு பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்கிறது. பிணையாளிகளை விடுவிக்கவும் ஹமாஸை வீழ்த்தவும் படையினர் துணிவுடன் சண்டையிடுகின்றனர்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் மாண்டனர். 251 பேரை ஹமாஸ் குழு பிணை பிடித்தது. எஞ்சிய 48 பிணையாளிகளில் 20 பேர் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய ராணுவம் ஹமாசுக்கு எதிராக நடத்திய பதில் தாக்குதல்களில் 64,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மரணமடைந்தனர்.
காஸாவின் ஒரு பகுதி பஞ்சத்தால் வாடுகிறது. காஸா வட்டாரத்தின் கிட்டத்தட்ட 75 விழுக்காடு ஏற்கெனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

