டெல் அவிவ்: கிழக்கு ஜெருசலத்தில் உள்ள துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக அது குறித்து விவரமறிந்த இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் புதன்கிழமை (செப்டம்பர் 9) தெரிவித்தனர்.
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் செவ்வாய்க்கிழமை தடைகளை அறிவித்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜெருசலம், மேற்குக்கரை, காசாவில் உள்ள பாலஸ்தீன விவகாரங்களில் பிரிட்டன் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் இந்தத் துணைத் தூதரகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
துணைத் தூதரகத்தை மூடுமாறு இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு குறித்து வருத்தம் தெரிவிப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபேண்ட் புதன்கிழமை கூறினார். இருப்பினும், இது, தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இஸ்ரேல்மீதான நடவடிக்கை எடுப்பதன் நன்மைகள், விளைவுகளை நாங்கள் சீர்தூக்கிப் பார்த்தோம், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குப் பயந்து எங்களால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று நாங்கள் கருதினோம்,” என்று பிபிசி தொலைக்காட்சி பேட்டியில் அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று பேசிய மிலிபேண்ட், பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் குடியேறிகள் நடத்தும் வன்முறைகளை இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது என்று கூறியிருந்தார்.
1839 முதல் ஜெருசலத்தில் இயங்கி வரும் இந்தத் துணைத் தூதரகத்தில் பணிபுரியும் பிரிட்டிஷ் அரசதந்திரிகள் 30 நாள்களில் தங்களது அரசதந்திர தகுதியை இழப்பார்கள் என்று இஸ்ரேலிய அதிகாரிகளும் தகவல் அளித்தவர்களும் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தலைமையிலான காசா ஒருங்கிணைப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளும், ரமல்லாவில் உள்ள பிரிட்டிஷ் அரசதந்திரிகளும் நாட்டை விட்டு வெளியேற ஏழு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சியளிக்க இனி பிரிட்டனுக்கு அனுமதி இல்லை என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேலும், 12 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவரும் இஸ்ரேலின் தீவிர விமர்சகருமான ஜெரமி கார்பின் உள்ளிட்ட பிற குடிமக்கள் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைத் தூதரகம் மூடப்படுவது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெட்டயன்யாகுவின் அலுவலகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

