ஜெருசலம்: போர்நிறுத்த உடன்பாடு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) நடப்புக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
போர்நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் மற்றும் காஸா மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் காஸா மீது இஸ்ரேல் அதிகமான தாக்குதல்களை நடத்தியதாக அவர்கள் கூறினர்.
ஆனால், காஸா போராளிகள் வியாழக்கிழமை (ஜனவரி 16) இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. இருப்பினும் அந்தத் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றது அது.
காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் அதனை மறுத்தனர். இஸ்ரேலின் வான்படைதான் புதன்கிழமை இரவிலும் வியாழக்கிழமை அதிகாலையிலும் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறினர்.
அந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 46 பாலஸ்தீனக் குடிமக்கள் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மனிதாபிமான உதவிகள் காஸாவில் தொடர அங்கு சண்டையை நிறுத்த உடன்பாடு கைகொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
இன்னும் ஓரிரு நாளில் அமெரிக்க அதிபர் பதவியை ஏற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், காஸாவில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த முன்னேற்றத்திற்குத் தமது முயற்சி காரணம் என்று கூறியுள்ளார்.

