ஊடகங்களுக்கான சட்டத்தைக் கடுமையாக்கிய இஸ்ரேல்

2 mins read
495d7ab7-9369-49dd-9c42-ec26f75f63fe
 ராணுவ வீரர்களும் போர்க்களத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகளையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: காஸாவில் நடக்கும் போரைப் போர்க்களத்தில் இருந்து உலகத்திற்குக் காட்டும் செய்தியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் கடுமையான சட்டங்களை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

போரில் பங்கேற்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் போர்க் குற்றம் புரிவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதனால் அவ்வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்நாடுகளால் தடுத்துவைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

அண்மையில் இஸ்ரேலிய தேசிய சேவையாளர் ஒருவர் பிரேசிலுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தார். அவரை அடையாளம் கண்ட பிரேசிலின் பாலஸ்தீன ஆதரவாளர்கள் அந்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்தனர்.

அவர் காஸாவில் நடந்த போரில் நேரடியாகப் பங்குபெற்றவர்.

நீதிபதியும் வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால் அந்த ராணுவ வீரர் அவசரமாகப் பிரேசிலைவிட்டு வெளியேறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இஸ்ரேல் தற்போது ஊடகச் சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளது.

புதிய விதிமுறைப்படி ராணுவ வீரர்களை நேர்காணல் காணும் ஊடகங்கள் அவர்களின் முழுப்பெயர், அவர்களது பொறுப்பு உள்ளிட்டவற்றை வெளியிடக்கூடாது.

மேலும் நேர்காணல் காணும் ராணுவ வீரரிடம் அவர்கள் பங்கேற்ற போர் குறித்து கேள்விகள் கேட்கக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

புதிய நடைமுறைகள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுபவர்களிடம் இருந்து தங்களது ராணுவ வீரர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

அதேபோல் ராணுவ வீரர்களும் போர்க்களத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகளையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஸாவில் போர்க் குற்றம் புரிந்ததாகக் கடந்த ஆண்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் கலான்ட், ஹமாஸ் தலைவர் இப்ராகிம் அல்மஸ்ரி ஆகியோருக்கு கைதாணை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸாபோர்