தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட காஸாவில் வீடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 mins read
f36479fb-1b3e-48e6-b5e1-9dfddb177eaf
காஸாவில் மக்கள் தஞ்சம் புகுந்த ஐக்கிய நாட்டுச் சபை நடத்திய பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல். - படம்: ஏஎஃப்பி

காஸா: வட காஸாவில் அதிகமானோர் இருந்த குறைந்தது ஐந்து வீடுகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) வெடிகுண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.

காஸாவின் வடக்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து நுழைந்துவரும் வேளையில் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்வதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலரைக் காணவில்லை என்றும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

தாக்குதல்களில் 57 பேர் மாண்டதாக ஹமாஸ் தரப்பு ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், காஸா சுகாதார அமைச்சு, அதிகாரபூர்வமாக மாண்டோர் எண்ணிக்கையை உடனடியாக வெளியிடவில்லை.

தாக்குதல்களைப் பற்றி இஸ்ரேலிய ராணுவமும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், ஹமாஸ் தரப்பு ஊடகங்கள் மாண்டோர் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்கிறது என்று இஸ்ரேலிய ராணுவம் பலமுறை குறை கூறியிருக்கிறது.

காஸாவில் குறைந்தது 48 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பலியானதாக புதன்கிழமையன்று (நவம்பர் 20) காஸாவின் சுகாதார அதிகாரிகள் கூறினர்.

வீடுகள், மத்திய காஸாவில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்குப் பாதுகாப்பு தந்த பள்ளி, வட காஸாவில் உள்ள பழம்பெரும் மருத்துவமனை போன்றவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக காஸா மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். மனிதாபிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தெற்கு காஸாவில் ஒதுக்கப்பட்டிருந்த அல்-மவாசி (Al-Mawasi), ராஃபா ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

காஸாவில் எந்தப் பகுதியும் இப்போது பாதுகாப்பானது இல்லை என்று பாலஸ்தீன, ஐக்கிய நாட்டுச் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், கடந்த சில வாரங்களாக வட காஸாவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அப்பகுதியில் மூன்று முக்கிய நகரங்களை இஸ்ரேலிய ராணுவம் சுற்றி வளைத்தது. அப்பகுதிவாசிகளை வெளியேறுமாறும் அது உத்தரவிட்டிருந்தது.

காஸாவில் இஸ்ரேல், 13 மாதங்களாக நடத்திவரும் ராணுவ நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 44,000 பேர் மாண்டுவிட்டனர். மேலும், ஒருமுறையாவது காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையும் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்