ஜெனிவா: காஸா மக்களுக்குத் தேவையான தண்ணீரை இஸ்ரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுத் தடுத்து வருவதாகச் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) அமைப்பு எச்சரித்துள்ளது.
அத்துடன், பாலஸ்தீனர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை ஒரு ‘கூட்டுத் தண்டனை’ என்றும் அது கடுமையாகச் சாடியுள்ளது.
மேலும், காஸா மக்களுக்கான நீர் உள்கட்டமைப்புகள் பேரளவில் அழிக்கப்படுவதும் தண்ணீர்க் கிடைப்பதற்கான வழிகள் அடைக்கப்படுவதும் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையின் ஓர் அங்கம் என அந்த மருத்துவ அமைப்பு கூறியுள்ளது.
“பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனைகள் அழிப்பு, குடியிருப்புகள் சேதம் ஆகியவற்றுடன் இந்தத் திட்டமிட்ட நீர்த் தட்டுப்பாட்டையும் காஸா மக்கள் எதிர்கொண்டு வருவதாக ‘தண்ணீரே ஆயுதம்’ என்ற தலைப்பில் அது வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அவை அனைத்தும் இணைந்த காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்களை அழிவின் விளிம்பிற்கும் மனிதநேயமற்ற வாழ்க்கை முறைக்கும் வேண்டுமென்றே இட்டுச்செல்வதாக அது எச்சரித்தது.
2024, 2025ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள், தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் அது சொன்னது.
“தண்ணீர் ஓர் அத்தியாவசியத் தேவை. அது இல்லையென்றால் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என இஸ்ரேலிய அதிகாரிகளுக்குத் தெரியும்,” என அவ்வமைப்பின் அவசரகாலப் பிரிவுக்கான மேலாளர் கிளாரி சான் பிலிப்போ தெரிவித்தார்.
“இருப்பினும், காஸாவில் உள்ள நீர் உள்கட்டமைப்புகளை வேண்டுமென்றே திட்டமிட்டு இஸ்ரேல் அதிகாரிகள் அழித்துள்ளனர். அதே நேரத்தில் தண்ணீர் தொடர்பான பொருள்கள் காஸா பகுதிக்குள் நுழைவதையும் அவர்கள் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் உள்ள நீர், ப்புரவு உள்கட்டமைப்புகளில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை இஸ்ரேல் சேதப்படுத்தியுள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி ஆகியவற்றின் தரவுகள் சுட்டிக்காட்டுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், ஆழ்துளை கிணறுகள், குழாய்கள், கழிவுநீர் அமைப்புகள் ஆகியவை செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என அந்த அறிக்கை கூறுகிறது.
காஸாவில் உள்ள மக்களுக்குத் தேவையான தண்ணீரை உடனடியாக வழங்கவேண்டும் என்று இஸ்ரேலுக்கு அந்த மருத்துவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

