ஜெருசலம்: ஹமாஸ் குழு நிபந்தனைகளுக்குக் கட்டுப்படவில்லை என்றால் காஸா நகரை அழிக்கப்போவதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியிருக்கிறார்.
ஹமாஸ் ஆயுதங்களைக் களையவும் எஞ்சிய பிணையாளிகளை விடுவிக்கவும் மறுத்தாலோ காஸா நகரைத் துடைத்தொழிக்கப்போவதாக அவர் சொன்னார்.
இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு ஏற்ப ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர இணங்கவேண்டும் என்றார் திரு காட்ஸ்.
சமூக ஊடகத்தில் அது குறித்து அவர் பதிவிட்டார்.
“ஹமாசின் தலைநகரமான காஸா, ராஃபாவையும் பெய்ட் ஹனூனையும் போலாகிவிடும்” என்று அவர் எச்சரித்தார். இஸ்ரேலின் முன்னைய நடவடிக்கைகளில் அந்த இரண்டு நகரங்களும் முற்றாக அழிந்துபோயின.
காஸாவில் எஞ்சிய பிணையாளிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான சமரச முயற்சிகளை உடனடியாகத் தொடங்கும்படி உத்தரவிட்டிருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) கூறியிருந்தார். அதன் பிறகு திரு காட்சின் கருத்து வந்துள்ளது.
காஸாவை முழுமையாய்க் கைப்பற்றப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. அதற்கு உலக அளவில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.