காஸா சிட்டி: காஸாவில் உள்ள இரண்டு உதவி நிலையங்கள் அருகே இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகக் காஸாவின் தற்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் சனிக்கிழமை (ஜூலை 19) நடந்ததாகவும் அதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.
உதவி நிலையங்கள் கான் யூனிசின் தென்மேற்குப் பகுதியிலும் ராஃபாவின் வடமேற்குப் பகுதியிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உணவுக்காக உதவி நிலையங்கள் செல்பவர்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக அது குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், காஸாவில் உதவிப் பொருள்களை விநியோகம் செய்யும் ஜிஎச்எஃப் (GHF) உதவி அமைப்பு, ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள்தான் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகளின் செயல்பாடுகள் உதவி நிலையங்களுக்கு அருகே சலசலப்பை ஏற்படுத்திப் பிரச்சினையை உண்டாக்குவதாக அது கூறுகிறது.
ஜிஎச்எஃப் (GHF) உதவி நிலையம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவில் நடத்தப்படும் நிலையம். அது காஸாவில் இடம்பெறும் பெரும்பாலான உதவிப் பொருள்களை விநியோகம் செய்கிறது.
இந்நிலையில், “21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் காஸாவில் நடத்தி வரும் போரால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல் நலமும் மனநலமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று கான் யூனிசில் மருத்துவ முகாம் அமைத்துள்ள குவைத்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
போதுமான உணவு, மருந்து இல்லாமல் நூற்றுக்கும் அதிகமானோர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.