ஜெருசலம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த உடன்பாடு உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை 8.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு) நடப்பிற்கு வரும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீனிய கைதிகள் அனைவரும் ஜனவரி 19 பிற்பகலுக்கு முன்னர் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இஸ்ரேல் கூறியிருந்த போதிலும், சண்டைநிறுத்தம் தொடங்கும் சரியான நேரம் தெளிவாக இல்லை.
சண்டைநிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவலகம் சனிக்கிழமை (ஜனவரி 18) தெரிவித்தது.
ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எட்டப்பட்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாசுக்கும் இடையே 15 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சமரசப் பேச்சில் ஈடுபட்ட எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரி 15ஆம் தேதி போர் நிறுத்தம் குறித்து அறிவித்தன.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகும் காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக காஸாவில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி 18ஆம் தேதி, காஸாவின் கான் யூனிஸ் பகுதிக்கு மேற்கே இருக்கும் மவாசி எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூட்டாரத்தின்மீது நடந்தப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 113 பேர் கொல்லப்பட்டனர் என்று காஸாவின் குடிமைத் தற்காப்பு மீட்பு அமைப்பு தெரிவித்தது. ஜனவரி 17ஆம் தேதி மட்டும் இஸ்ரேலிய ராணுவம் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 50 இலக்குகளைத் தாக்கியதாக அது கூறியது.
இதன்மூலம், போர் நிறுத்த உடன்பாடு ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலியப் படையின் குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்கா கூறியது. மேலும், ஜனவரி 19ஆம் தேதி காலை முதல் அமலுக்கு வரும் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி மூன்று பெண் பிணைக்கைதிகளை இஸ்ரேலிடம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஹமாஸ் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆறு வாரப் போர் நிறுத்தம் ஆறு கட்டங்களாக அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில், ஹமாஸ் வசம் இருக்கும் பிணைக்கைதிகள் இஸ்ரேலிடமும் இஸ்ரேல் ராணுவம் தடுத்துவைத்திருக்கும் கைதிகள் ஹமாசிடமும் ஒப்படைக்கப்படுவர்.
இஸ்ரேலியப் பிணைக்கைதிகளில் மீதமுள்ள 98 பேரில் பெண்கள், பிள்ளைகள், 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் உட்பட 33 பேரை ஹமாஸ் விடுவிக்கும். இஸ்ரேல் சிறையில் இருக்கும் 19 வயதிற்குட்பட்ட பாலஸ்தீனப் பிள்ளைகள், பெண்கள் விடுவிக்கப்படுவர்.