இஸ்ரேல் தேர்தல்: கடும் சவாலை எதிர்கொள்ளும் நெட்டன்யாகு

இஸ்ரேல் தேர்தல்: கடும் சவாலை எதிர்கொள்ளும் நெட்டன்யாகு

படம்: ராய்ட்டர்ஸ்

27 Oct 2026 - 2:52 pm

2 mins read

ஜெருசலம்: இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தமது அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள கடும் சவாலை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து காஸா மீதான போர், ஈரானுடனான மோதல், இஸ்ரேல் உலகளவில் சந்தித்து வரும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில், நெட்டன்யாகுவின் தலைமைத்துவத்தை அந்நாட்டு வாக்காளர்கள் தற்போது எடைபோட்டு வருகின்றனர்.

19 ஆண்டுகள் பதவியில் நீடித்து, இஸ்ரேலில் மிக நீண்டகாலப் பிரதமராகப் பணியாற்றிய தலைவர் என்ற பெருமை கொண்ட திரு நெட்டன்யாகு, எந்த ஓர் அரசியல் நெருக்கடியையும் திறம்படச் சமாளித்து மீண்டெழும் ஆற்றல் படைத்தவராகவே தொடர்ந்து பார்க்கப்படுகிறார்.

அங்கு தீவிரமடைந்து வரும் தேசியவாத அரசியல் போக்கும் பிளவுபட்ட பலகட்சி அரசியல் சூழலும் திரு நெட்டன்யாகு மீண்டும் அரசாங்கம் அமைப்பதற்குச் சாதகமான அம்சங்களாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கருத்துக்கணிப்புகளின்படி திரு நெட்டன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கும், முன்னாள் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு விவகாரங்களில் தீவிரக் கொள்கையுடையவருமான காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த எதிர்க்கூட்டணிக்கு வலதுசாரி, நடுநிலைவாத வாக்காளர்களின் ஆதரவு பரவலாக உள்ளது.

பிரதமர் நெட்டன்யாகு தமது போர்க்காலத் தலைமைத்துவத்தையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான நட்புறவையும் முன்னிறுத்தித் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிபர் டிரம்ப், பிரதமர் நெட்டன்யாகுவிற்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருப்பதுடன், ஈரானுக்கு எதிரான போரிலும் இஸ்ரேலுடன் கைகோத்துள்ளார்.

தாம் அதிகாரத்தில் நீடித்தால் மட்டுமே, ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலுமாகத் துடைத்தொழிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் களமிறங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 25) தெரிவித்திருந்தார்.

பிரதமர் நெட்டன்யாகு மீண்டும் ஆட்சியமைக்க வேண்டுமெனில், தீவிர வலதுசாரித் தலைவர்களான இடாமர் பென்-க்விர், பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோரின் ஆதரவையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியதாகக் கூறி அவர்கள் இருவர் மீதும் சில மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே பொருளியல் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், தற்போதைய கருத்துக்கணிப்புகளில் பென்-க்விரின் ‘யூத சக்தி’ கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்