மருத்துவமனை மீது இஸ்‌ரேல் தாக்குதல்; ஐவர் மரணம்

2 mins read
82cc32b5-dc49-4bdf-b6f1-b43551745a5c
மருத்துவமனையின் மூன்றாவது மாடி கொழுந்துவிட்டு எரிவதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. ஆனால் காணொளியின் உண்மைத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: காஸாவில் உள்ள மருத்துவமனையைக் குறிவைத்து இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மாண்டோரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர்களில் ஒருவரும் அடங்குவார்.

இத்தகவலை ஹமாஸ் அமைப்பும் பாலஸ்தீன சுகாதார அமைச்சும் வெளியிட்டன.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நிகழ்ந்தது.

ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதிகளில் ஒருவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

உளவுத்துறையிடமிருந்து மிகத் துல்லியமான தகவல் கிடைத்ததை அடுத்து, அதிக அளவில் சேதம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதியைக் கொன்றதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

அவ்விடத்தில் உள்ள மற்றவர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்க இவ்வாறு செய்ததாக அது கூறியது.

இந்நிலையில், இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் தமது அரசியல் பிரிவைச் சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் மாண்டுவிட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குலில் காயமடைந்த பர்ஹோம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததாக ஹமாஸ் அமைப்பின் அல் அக்சா தொலைக்காட்சி தெரிவித்தது.

காஸாவில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் தனது போராளிகளை ஹமாஸ் வேண்டுமென்றே பதுக்கி வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருகிறது.

மருத்துவமனையின் மூன்றாவது மாடி கொழுந்துவிட்டு எரிவதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

ஆனால் காணொளியின் உண்மைத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) காஸா முனையின் வடக்குப் பகுதி, மத்தியப் பகுதி, தென்பகுதியில் இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ராஃபா, கான் யூனிஸ் ஆகிய இடங்களில் இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியதில் மார்ச் 23ஆம் தேதியன்று இதுவரை குறைந்தது 45 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துவிட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸாஹமாஸ்