‘டெஹ்ரான்’ தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்த இஸ்ரேலியர் ஏத்தென்ஸ் ஹோட்டலில் மரணம்

‘டெஹ்ரான்’ தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்த இஸ்ரேலியர் ஏத்தென்ஸ் ஹோட்டலில் மரணம்

1 mins read
ee0fdeeb-5790-494d-b220-96cd725732a9
‘டெஹ்ரான்’ தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்தவரும் உருவாக்கியவருமான டானா ஈடன் மாண்டுகிடக்கக் காணப்பட்ட ஏத்தென்ஸ் ஹோட்டலைக் கடந்து ஆடவர் நடந்துசென்ற காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஏத்தென்ஸ்: மர்மங்கள் நிறைந்த விறுவிறுப்பான ‘டெஹ்ரான்’ தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்தவர், கிரீஸ் தலைநகர் ஏத்தென்சில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) மாண்டுகிடக்கக் காணப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கிரீஸ் நாட்டின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்டுகிடந்த 52 வயதுப் பெண், டானா ஈடன் என்று அடையாளம் காணப்பட்டார். சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னர் ஈடனின் உறவினர், பல முறை அவரைத் தொடர்புகொள்ள முயன்றார்.

ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில், சம்பவம், தற்கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

கிரீஸ் நாட்டுப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் சில மாத்திரைகளைக் கண்டெடுத்தனர். மாண்டவரின் கழுத்தில் காயங்கள் இருந்ததையும் மரண விசாரணை அதிகாரி கண்டுபிடித்தார்.

“மாண்டவரின் குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோருக்கு இது துயரமான தருணம்,” என்று அனைத்துலகத் தயாரிப்பு நிறுவனமான டோனா அண்ட் ‌ஷுலா புரொடக்‌ஷன்ஸ் அறிக்கையொன்றில் தெரிவித்தது.

தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களையும் பொதுமக்களையும் அது கேட்டுக்கொண்டது.

‘டெஹ்ரான்’ நான்காம் தொடரின் படப்பிடிப்புக்காக ஈடன் கிரீசில் இருந்ததாக இஸ்ரேலின் கான் ஊடகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்