ஜெருசலம்: காஸா நகரத்தில் இஸ்ரேலிய தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை (செப்டம்பர் 20) காஸா நகரத்தை மட்டுமல்லாமல் காஸாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியது.
சுரங்கப் பாதைகள், கண்ணி வெடிகள் என நிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 60 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று காஸா சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த வாரம் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை கூடவுள்ளது. அதில் பாலஸ்தீனம் தொடர்பாக அதிகம் பேசப்படலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
காஸாவில் உள்ள உயர்மாடிக் குடியிருப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாள்களாகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரம் நிலத்திலும் அதன் ராணுவத் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
காஸா நகரத்தின் கிழக்கு புறநகரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் வைத்துள்ளது.
நகரத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் சேக் ரட்வான், டெல் அல்ஹாவா பகுதிகளில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த இரண்டு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான காஸா நகர மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் காஸா நகரத்தில் 20 உயர்மாடிக் கட்டடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியுள்ளது.
இம்மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரைமட்டும் 500,000க்கும் அதிகமான மக்கள் காஸா நகரத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
கிட்டத்தட்ட காஸாவில் இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் 65,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் படையினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து இஸ்ரேல் காஸாமீது போர் தொடுத்தது.