பேங்காக்: தாய்லாந்தில் துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் வழங்குவதை நிறுத்திவைப்பதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் அறிவித்துள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்களும் மறுஆய்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்குமுன் 14 வயதுச் சிறுவன் ஒருவன் ஒன்பது பேரைச் சுட்டுக்கொன்றதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் கட்டுப்பாட்டிற்கான புதிய சட்டத்தை விரைவுபடுத்தவும் அதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் மிகக் கடுமையான தண்டனைகளையும் சேர்க்கவும் சட்ட விவகாரங்களைக் கவனிக்கும் துணைப் பிரதமருக்குத் திரு அனுட்டின் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் துப்பாக்கிகள் வாங்குவதற்கு வழிவகுக்கும் உரிமங்களைப் புதுப்பிப்பதை உடனடியாக நிறுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தை சுட்டிக்காட்டி, பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கிகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்றும் அவற்றை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் பிரதமர் அனுட்டின் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம், தாய்லாந்தில் மாணவன் ஒருவன் தன் தாத்தா, பாட்டியை சுட்டுக்கொன்ற பிறகு, பேங்காக் நகருக்கு வெளியே உள்ள பள்ளி ஒன்றில் ஆறு பேரைச் சுட்டுக்கொன்றபின் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டான். கடந்த நான்கு ஆண்டுகளில் அங்கு நடந்த ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இது.
கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி, தாய்லாந்தில் 100 பேருக்கு 15 துப்பாக்கிகள் என்ற விகிதத்தில் பொதுமக்கள் வசம் ஏறக்குறைய 10.3 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன. தென்கிழக்காசிய வட்டாரத்தில் இதுவே ஆக அதிக விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.


