வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகரின் சாலைகளில், சீனப் பொருள்களைக் காண்பது அரிதாகவே உள்ளது.
பென்சில்வேனியா அவென்யூவில் ‘பிஒய்டி’ மின்சார கார்கள் உலா வரவில்லை; மாறாக ஜப்பானிய வாகனங்களான ஹோண்டா, டொயோட்டா, சுபாரு ஆகியவைதான் அதிகம் தென்படுகின்றன. சீனாவின் இரண்டு முக்கியத் திறன்பேசிகளான ஹூவாவே, ஸியாவ்மி முதலியவை மக்களின் கைகளில் காணப்படவில்லை.
மேலும், அமெரிக்காவின் மற்ற நகரங்களில் திறக்கப்பட்டுள்ள லக்கின் காபி, ஹைடிலாவ் ஹாட்பாட் போன்ற சீன உணவகக் கிளைகள் வாஷிங்டனில் எங்கும் இல்லை.
இருப்பினும் பிரபலமான ‘லபுபு’ பொம்மைகளைத் தயாரிக்கும் பெய்ஜிங்கின் ‘பாப் மார்ட்’ நிறுவனத்தை வாஷிங்டனில் எளிதில் அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அதன் அருகிலுள்ள கடைகூட போட்டோமேக் நதியைக் கடந்து வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில்தான் உள்ளது; இருப்பினும், ஜார்ஜ்டவுன் மாவட்டத்தில் மற்றொரு கடையைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போபா பானப் பிரியர்கள் மொல்லி டீ, ஹேடீ போன்ற சீனாவின் புதிய வகை தேநீர்களைப் பருக, வாஷிங்டனுக்கு வடமேற்கே ஆசிய-அமெரிக்க மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறப் பகுதியான மேரிலேண்டின் ராக்வில் வரை பயணம் செய்யவேண்டியுள்ளது.
மின்சார கார்கள், திறன்பேசிகள் முதல் பொம்மைகள், ஆடை அலங்கார நிறுவனங்கள் வரை சீனப் பொருள்கள் உலகின் மற்றச் சந்தைகளில் மிக வேகமாக விரிவடைந்துவரும் நேரத்தில், இந்த இடைவெளி வியப்பைத் தருவதாகக் கூறப்பட்டது.
வியாழக்கிழமை, இந்த இடைவெளி வெள்ளை மாளிகை வரை நீடித்தது.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் வருகையைச் சிறப்பிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அளித்த அரசாங்க விருந்தில், அமெரிக்க நிறுவனங்களின் முன்னணிப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
என்விடியாவின் ஜென்சன் ஹுவாங், ஏஎம்டியின் லிசா சு, ஆப்பிளின் டிம் குக், டெஸ்லாவின் இலான் மஸ்க் ஆகியோர் இரு நாடுகளின் அதிபர்களோடும் அவர்தம் மனைவியரோடும் ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர்.
வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ விருந்தினர் பட்டியலின்படி, 134 விருந்தினர்களில் 19 பேர் மட்டுமே சீனத் தரப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் திரு ஸி ஜின்பிங், தலைமை அதிகாரி சாய் சி, வெளியுறவு அமைச்சர் வாங் யி, வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, துணைப் பிரதமர் ஹெ லிஃபெங், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஸீ ஃபெங் போன்ற உயர் அதிகாரிகள் அடங்குவர்.
